×

பேனர் விழுந்ததால் நிலைத்தடுமாறிய சுபஸ்ரீ விபத்தில் சிக்கிய வீடியோ காட்சிகளை வெளியிட்டது காவல்துறை!

சென்னை: சுபஸ்ரீ உடலை சரக்கு ஆட்டோவில் கொண்டு செல்லும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. சுபஸ்ரீ விபத்தில் சிக்கிய காட்சிகளை தற்போது காவல்துறை வெளியிட்டு வருகிறது. பேனர் விழுந்தவுடன் அதிர்ச்சியில் ஸ்கூட்டர் நிலை தடுமாறி சாலையில் சுபஸ்ரீ விழுகிறார். இதையடுத்து பின்னல் வந்த லாரி ஏறியதால் சுபஸ்ரீ உயிர் பிரிந்தது. மேலும் போலீஸ் தகராறால் அரைமணி நேரம் சுபஸ்ரீ உடல் சாலையில் கிடந்தது. அதன் பின்னர் அவரது உடலை சரக்கு ஆட்டோவில் கொண்டு சென்றனர். அதிமுக பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்தது பற்றி சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை இன்று நடைபெற்றது.

சென்னை பள்ளிக்கரணையில் லாரியில் சிக்கி இளம்பெண் உயிரிழந்த சுபஸ்ரீ தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. வழக்கறிஞர் லட்சுமிநாராயணன் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மேலும் இந்த வழக்கில் காவல்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழக அரசிடம் சரமாரி கேள்விகளை கேட்டனர். மேலும், சட்டவிரோத பேனர்கள் வைப்பவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்க போகிறீர்கள்? என கேள்வி எழுப்பினர்.

இதையடுத்து, உயிரிழந்த சுபஸ்ரீ குடும்பத்திற்கு என்ன நஷ்டஈடு வழங்கப்போகிறீர்கள் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், சுபஸ்ரீ குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இடைக்கால நிவாரண நிதியாக வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். நிவாரணத் தொகையை, தவறு செய்த அதிகாரிகளிடம் இருந்து வசூலிக்கவும் உத்தரவிட்டனர். இந்த நிலையில், விபத்து நடந்த வீடியோ காட்சிகளை காவல்துறை வெளியிட்டுள்ளது. அதில், பேனர் விழுந்ததால் சுபஸ்ரீ தடுமாறி விழுந்த காட்சி, அவர் மீது லாரி எரிய காட்சிகள் நெஞ்சை உலுக்கியது.

Tags : crash , Banner, Subasree, Video Display, Output
× RELATED மும்பை ராட்சத பேனர் விபத்து: உயிரிழப்பு 14 ஆக உயர்வு